ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போருக்கு முடிவுகட்டத் அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் பலனாக அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை, அபுதாபியில் நடைபெறுகிறது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் விவாதிக்கின்றனர்.
இதற்கிடையே முதல் நாள் பேச்சுவார்த்தை முடிந்தச் சற்று நேரத்தில், இரவோடு இரவாக உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கீவ் பகுதிகளில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடைபெறுவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டும் முன், ரஷ்ய படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதல் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
















