கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குளச்சல் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் ஷார்லின் சேம் என்பவருக்குச் சொந்தமான கவரிங் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 5 பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவது போல் வந்துள்ளனர்.
அப்போது, பெண் ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 காப்பு, 14 தாலி செயின் உள்ளிட்ட நகைகளை பையில் மறைத்து திருடிச் சென்றனர்.
இதனையடுத்து, நகை திருடப்பட்டதை உணர்ந்த பெண் ஊழியர், கடை உரிமையாளரிடம் தெரிவித்த நிலையில், அவர் போலீசில் புகார் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது புத்தளம் பேரூராட்சி துணைத்தலைவியும், திமுக நிர்வாகியுமான பால் தங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், பால் தங்கம், அவரது மகள் சபரிஷா, கார் ஓட்டுநர் அனிஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயலட்சுமி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















