சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரமங்கலம் அடுத்த சேலத்தம்பட்டி பகுதியில் சுமதி என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் வெள்ளி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், பகல் ஒரு மணி அளவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் கடைக்குள் புகுந்து சுமதி மீது மிளகாய் பொடி தூவிவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, அவர் கூச்சலிட்டு அலறியதால், பயந்துபோன மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை முயற்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர் நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்துமுனை பகுதியில் சந்தேகத்திற்கு வகையில் நின்று கொண்டிருந்த கண்ணதாசன் என்பவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் உருக்கிய நிலையில் 2 தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், நண்பர் ஸ்ரீராம் உடன் சேர்ந்து கீரனூர் பகுதியில் உள்ள 2 வீடுகளில் நகைகளை அந்த நபர் கொள்ளைடித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, கண்ணதாசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 132 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
















