வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என்று போற்றப் படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஒரு போதும் தனது சந்தையை முழுமையாகத் திறக்காத சுயபாதுகாப்பு உடைய நாடாகவே இந்தியா இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்ததிலிருந்து அது மாறிவருகிறது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வர்த்தகப் போராகவே மாற்றினார்.
உலக நாடுகள் மீது வரிவிதித்த அமெரிக்க அதிபர், ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணமாக காட்டி இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தார்.
இதனால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவீதம் வரை குறையும் என்றும், சுமார் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரியும் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் சமாளிக்கவும், இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் சிறந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது அமெரிக்காவுக்கு விடப்படும் நேரடி செய்தியாகவே பார்க்கப் படுகிறது.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க மறுத்துவிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வது உக்ரைன் போருக்கு ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார்.

சொல்லப்போனால் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இறுதியாகாமல் இருந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக ட்ரம்பின் வரிக் கொள்கைகளே காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்க மற்றும் சீன ஆதிக்கத்தால் தடுமாறும் சிக்கலான உலகச் சூழலில் நடுத்தர வல்லரசு நாடுகளால் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா எடுத்துக் காட்டியுள்ளது.
எனவே, பிற உலக நாடுகளை வரி கொள்கையால் அதிபர் ட்ரம்ப் இனி மிரட்ட முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் உடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதார மற்றும் இராஜதந்திர உத்தியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இனி, அமெரிக்காவை விட இந்தியாவே ஐரோப்பிய நாடுகளின் மொத்த பொருளாதாரத்தையும் பயன்படுத்தப்போகிறது.
ஏற்கெனவே கடந்த மே மாதம் பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவும், நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதே மாதத்தில் ஓமனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியது.
அடுத்து வரும் பிப்ரவரி மாதம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, இந்தியாவுக்கு வருகை தரும் போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தொடர்ந்து வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி,இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச வர்த்தகம் மற்றும் இராஜதந்திர விதிகளை மாற்றுவதில் புதிய மாற்றத்தை உருவாக்கிய இந்தியாவால் உலக அளவில் தனித்து விடப்பட்ட நிலையில் அமெரிக்கா, அரசியல் ரீதியான நடவடிக்கையை எடுக்குமா ? என்பது தான் இப்போதைய கேள்வி.
















