மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசின் தலைவருமான அஜித் பவார் சென்ற தனிவிமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானக் குழுவினர் கடைசியாக “ஐயோ…” என்று கதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் உள்ள பாராமதிக்குச் சென்றார். பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்திலிருந்த அஜித் பவார் உள்ளிட்ட அனைவரும் தீயில் கருகிப் பலியாகினர்.
மும்பையில் இருந்து காலை 8.10 மணிக்கு பாராமதிக்குப் புறப்பட்ட லியர்ஜெட் விமானம் 8.45 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
காலை 8:18 மணிக்கு விமானப் போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட பிறகு இருபத்தி ஆறு நிமிடங்கள் கழித்து, காலை 8:44 மணிக்கு, அந்த விமானம் விமான ஓடுபாதைக்கு அருகில் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளன.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதையும், தீப்பற்றி விமானம் எரிவதையும் பெரும் புகையும் தெரிகின்றன.
புறப்பட்டதில் இருந்து வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே வானில் பறந்த இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் இடதுபுறம் சாய்வதைக் காட்டும் ஒரு புதிய காணொளியும் வெளியாகியுள்ளது.
விமானங்களின் நேரலை கண்காணிப்பு தளமான Flightradar24-ன் தரவுகள் படி, அஜித் பவார் சென்ற லியர்ஜெட் 45 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டதும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 19,000 அடி உயரத்தில் பறந்ததாக தெரியவருகிறது.
பாராமதி விமான நிலையத்தில் ஓடுபாதை 11- ல் பார்வை அடிப்படையிலான தரையிறங்கும் முயற்சியை லியர்ஜெட் விமானிகள் மேற்கொண்டனர்.
காற்று மற்றும் பார்வைத் தெளிவு குறித்த வானிலை பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். காற்று அமைதியாக இருப்பதாகவும், பார்வைத் தெளிவு சுமார் 3,000 மீட்டர்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ஆனாலும் ஓடுபாதை தெளிவாக தெரியாததால் தரையிறங்கும் முடிவைக் கைவிட்ட விமானிகள், ஒரு சுற்று சுற்றிவிட்டு இரண்டாவது முறையாக மீண்டும் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தனர்.
ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு, ஓடுபாதை தெரிகிறதா என்று விமானிகளிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு விமானிகள் தெளிவாக தெரிகிறது என்று ஒப்புக்கொண்டதாகவும், இதனையடுத்து பாராமதியில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அனுமதியை மீண்டும் உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தரையிறங்குவது குறித்த எந்த உறுதிப்படுத்தல் பதிலும் தராத நிலையில் Automatic Dependent Surveillance-Broadcast சிக்னல்களும் விமானத்தில் இருந்து வரவில்லை என்றும் உறுதிபடுத்தப் பட்டுள்ளது.
இதற்கு ஒரு நிமிடம் கழித்து, காலை 8.44 மணிக்கு, சிசிடிவி காட்சிகளில் இருந்து கிடைத்த புதிய காட்சிகளில் விமானம் ஒரு பக்கமாக சாய்ந்து தரையில் மோதி தீப்பிடித்து எரிவதை காண முடிகிறது.
விமானக் குழுவினரிடமிருந்து கடைசியாகக் கேட்கப்பட்ட வார்த்தைகள் ஐயோ என்ற அலறல் தான் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானி அறை குரல் பதிவுக் கருவி மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவி ஆகியவையும் மீட்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விமான விபத்து விசாரணைப் பணியகமும் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலின் ‘தாதா’ என்று அன்புடன் அழைக்கப்படும் அஜித் பவாரின் மறைவு அம்மாநிலத்தை மட்டுமில்லாமல் தேசத்தையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது
















