தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைதுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரச் சம்பவம் குறித்து சமூகப் பொறுப்போடு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் அவர்களைத் திமுகவின் ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவத்துள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து தொலைபேசி வாயிலாக பிரவீன் ராஜ் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு, சட்டரீதியாக தம்பி பிரவீன் ராஜ் அவர்களோடு துணை நிற்கும் என்றும் உறுதியளித்ததாக நயினார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது, சமூக வலைதளத்தில் பதிவிடுவோரை மட்டும் தேடித்தேடி கைது செய்யும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கர ஆட்சி கூடிய சீக்கிரம் தூக்கியெறியப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
















