ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியாவிடம் வாலாட்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி நாடுகளுக்கு தலையில் இடியை இறக்கும் சம்மட்டி அடியாக விழுந்துள்ளது… அதுமட்டுமல்ல வாயை திறந்தாலே வரி வரி வரி என கொக்கரிக்கும் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது…
வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 90 சதவிகித்திற்கும் அதிகமான வரிகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்பதுதான் இதில் ஹைலைட்டான பாயிண்ட்..
2032ம் ஆண்டுக்குள் இந்தியா, ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் என்பதோடு, ஐரோப்பிய தயாரிப்புகள் 4 பில்லியன் யூரோக்கள் வரை சேமிப்பை பெறும் என்று மதிப்பிடப்படுகிறது… இது ஒருபுறமிருக்க, இந்த ஒப்பந்தம், வங்கதேசம், பாகிஸ்தான் மட்டுமல்லாமல், அமெரிக்கா, துருக்கி நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது… இதை நம்மூர் மொழியில் கூற வேண்டும் என்றால், ஒரு கல்லில் 2 மாங்காய் அல்ல, 4 மாங்காய் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்…
பலவீனமான பொருளாதாரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தட்டுத்தடுமாறி வரும் பாகிஸ்தானுக்கும், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இந்தியா – ஐரோப்பிய யூனியனின் நெருங்கிய உறவு ஆபத்தான அறிகுறியாக பார்க்கப்படுகிறது… ஏனெனில் ஐரோப்பிய யூனியன் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பையும் பெற்றுள்ளது இந்தியா… இதன் காரணமாக கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளை தளமாக கொண்டு இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இந்தியாவால் குறிவைக்கப்படக் கூடும் என்று அந்த அமைப்பே ஆடிப்போயுள்ளது… வரும் காலங்களில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்பார்க்கலாம்…
பூஜ்ய வரி காரணமாக, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வரும் வங்கதேசம், இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தால் பரிதவித்து வருகிறது… அண்மையில் ஒரு நேர்காணலின்போது பேசிய வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், குறைந்த வரி காரணமாக இந்திய நிறுவனங்கள், வங்கதேசத்திற்கு இடம்பெயரக்கூடும் என்று இருமாப்போடு கூறியிருந்தார்… ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டியதுதான் அதற்குக் காரணம்… ஆனால், இனி எல்லாம் மாறப்போகிறது…

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக 7 பில்லியன் டாலர்களாக இருக்கும் ஏற்றுமதி, இனி 30 முதல் 40 பில்லியன் டாலராக அதிகரிக்கும்…. வங்கதேச ஆடைகளுக்கு போட்டியாக இந்திய ஆடைகள் ஐரோப்பிய சந்தைகளை அலங்கரிக்கும், இந்திய ஆடைகளின் தரம், விலை நிர்ணயம் போன்றவை வங்கதேச ஆடைகளை ஓரங்கட்டவும் வழிவகுக்கும்… இது வங்கதேச ஏற்றுமதியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள், வெடிமருந்துகளை தாராளமாக வழங்கி உதவியது துருக்கி… அதன் பின்னர், இந்தியா – துருக்கி இடையிலான உறவு கசந்து விரிசல் விழத்தொடங்கியது… ஆனால் தற்போது ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம் துருக்கியை பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது… அதாவது தன்னுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் வரியை குறைத்தால், துருக்கியும் அதே வரிவிதிப்பைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்… ஆனால், இந்தியா துருக்கிக்கு எந்த வரியை வேண்டுமானாலும் விதிக்கலாம், அதனை ஐரோப்பிய யூனியன் கட்டுப்படுத்தாது… இதனை துருக்கி எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பார்ப்பது இந்தியாவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்…
அமெரிக்காவின் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாத இந்தியா, வரி விதிப்பு ஆயுதங்களை துச்சமென எண்ணி புறந்தள்ளியது.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அபத்தான அறிக்கைகளை வெளியிட்டபோதும், இந்தியா அதனை நிராகரித்தது…இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஐரோப்பிய யூனியன் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்திருக்கிறது… இந்தியாவின் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை, டிரம்பின் அடாவடி நடவடிக்கை இழந்திருப்பது, அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களிடம் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
இப்படி இந்தியாவின் சாதூர்யமான வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவின் அச்சுறுத்தலை பதிலளிக்கும் விதமாகவும், மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகிறது என்பதுதான் உண்மை…
















