ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், டிடிபி எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை தொடர்ந்து ஆதரித்து வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய கவாஜா ஆசிப், அண்டை நாடுகளில் அரசியல் குழப்பம், போர் என மோசமான நிலைமை உள்ளதால் இது ஆப்கனை தாக்க சரியான நேரம் அல்ல எனவும் கூறினார். ஆனால், நிச்சயமாக தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்த கவாஜா ஆசிப், அது தங்களுடைய வசதிக்கு ஏற்ப நடைபெறும் என்றும் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை ராணுவ ரீதியானதாகவோ அல்லது தூதரக உறவை முறித்துக் கொள்வதை போன்றோ இருக்கலாம் எனவும் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
















