அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பை பற்றிய ஆவணப் படம் திரைக்கு வந்துள்ளது. உலகையே வியக்கவைக்கும் அளவுக்கு விற்பனையான இந்த ஆவணப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன
ஈரானுடன் போர் ஆயத்தம், உலக நாடுகளுடன் வர்த்தக மோதல், உள்நாட்டில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் என்ற நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலனியா பற்றிய ஆவணப்படத்தின் பிரத்யேக முதல் காட்சியை வெள்ளை மாளிகையில் கண்டுகளித்துள்ளார்.
அமெரிக்காவில் 1,500 திரையரங்குகள் உட்பட உலகமெங்கும் 27 நாடுகளில் 2,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
மெலனியா திரைப்படத்தை ‘ரஷ் ஹவர்’ திரைப்படத் தொடரால் புகழ்பெற்றவரும் 2017ம் ஆண்டில் MeToo பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளானவருமான பிரட் ராட்னர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் உரிமையை 40 மில்லியன் டாலர்களுக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. இத்துடன் சுமார் 35 மில்லியன் டாலர்களை விளம்பரச் செலவுகளுக்காக வழங்கியுள்ளது. இதுவே ஆவணப்பட உரிமைக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும். இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாயாகும்.
இந்த திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய மெலனியா, இப்படத்தின் மொத்த ஸ்ட்ரீமிங் உரிமை விற்பனையில் 70 சதவீதத்தைப் பெற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
2024 தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்த யோசனை தமக்கு வந்ததாகவும், முதல் பெண்மணியின் கண்ணோட்டத்தில் பதவியேற்புக்கு முந்தைய சில நாட்களை மக்கள் பார்க்க இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றபின் ட்ரம்ப் மற்றும் மெலனியா மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் விதமும், பதவியேற்புக்கு முந்தைய 20 நாட்களும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒரு மனைவியாக மற்றும் தாயாக இருக்கும் முன்னாள் மாடல் தனது கணவரை மீண்டும் எப்படி அதிபராக்கினார் என்பதையும், மீண்டும் வெள்ளை மாளிகைக்கு குடும்பத்தை அழைத்துச் செல்லும் பொறுப்பை எப்படி சாத்தியமாக்கினார் என்பதையே இந்த ஆவணப் படம் எடுத்துக் காட்டுகிறது.
பதவியேற்பு விழாவுக்கு திட்டமிடுவது, குடும்ப உறுப்பினர்களுடன் நெகிழ்ச்சியைப் பரிமாறி கொள்வது என மெலனியாவின் தனிப்பட்ட உணர்வுகளும் அறிவுத் திறனும் மட்டுமில்லாமல் அவரின் அன்றாடப் பழக்க வழக்கங்கள், ஆடைத் தேர்வுகள், இராஜதந்திர ஈடுபாடுகள் ஆகியவையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப்படத்தில், கேபிடல் கட்டிடத்திலிருந்து கேமராவைப் பார்த்து “நாங்கள் மீண்டும் இங்கு வந்துவிட்டோம்” என்று மெலனியா சொல்லும் காட்சியும் வைக்கப் பட்டுள்ளது.
கவர்ச்சியான முகம், பிரமாண்ட தயாரிப்பு, மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற போதும் மெலனியா திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

வட அமெரிக்காவில் முதல் வார இறுதியில் வசூல் 1 மில்லியன் டாலர் முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று பிரிட்டனின் முக்கிய திரையரங்கு சங்கிலியான வூ சினிமா (Vue Cinema) வின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் நடந்த முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டதாகவும், அதே நாளில் மாலை 6.00 மணி காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பிளாக்பர்ன், காசல்ஃபோர்ட் மற்றும் ஹாமில்டன் போன்ற நகரங்களில் 28 காட்சிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஒரு டிக்கெட் கூட விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மெலனியா படத் தயாரிப்புக் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் தங்கள் பெயர்களைத் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் இருந்து நீக்குமாறு கோரியுள்ளதாக ரோலிங் ஸ்டோன் (Rolling Stone) பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது அரசியல் படமல்ல என்று கூறப்பட்டாலும், படத்தில் அரசியல் பிரச்சாரத் தன்மை இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
















