12 இடங்களில் பலோச் விடுதலைப் படை தாக்குதல் – 10 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் பலி!
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத அமைப்பான பலோச் விடுதலைப் படை (Baloch Liberation Army – BLA) இன்று அதிகாலை முதல் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய கோரத் தாக்குதல்களால் பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ளது.
தங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி ‘ஆபரேஷன் ஹெரோஃப்’ (Operation Herof) என்ற பெயரில் இரண்டாம் கட்டத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக BLA அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் மூலம் இந்த அழிவு வேலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குவெட்டா, பஸ்னி, மஸ்துங், நுஷ்கி மற்றும் குவாடர் உள்ளிட்ட 12 முக்கிய மாவட்டங்களில் உள்ள ராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் சிவில் நிர்வாக அலுவலகங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 10 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பதிலடித் தாக்குதலில் 58 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. (மொத்த உயிரிழப்பு 68-ஆக உயர்ந்துள்ளது).
மாகாணத் தலைநகரான குவெட்டாவில் மட்டும் 4 போலீசார் கொல்லப்பட்டனர். அங்குள்ள ரயில் நிலையம் மற்றும் உயர் பாதுகாப்புப் பகுதிகளில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மக்கள் பீதியுடன் தெரிவிக்கின்றனர்.
பலுசிஸ்தான் முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மொபைல் போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நுஷ்கி மாவட்டத்தின் துணை ஆணையர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை போர் தொடரும்” என அவர் உறுதியளித்துள்ளார். ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு மற்றும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
















