உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, தமிழ் மொழியை அவர் எந்த அளவுக்கு ஆழமாக நேசிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமையை மீண்டுமொரு முறை உலகிற்கு பறைசாற்றியுள்ளார். தமிழ் மொழியின் தொன்மையான வரலாற்றினை அறிந்து, அதன் மீது தீரா காதல் கொண்டுள்ள பிரதமர் மோடி, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தமிழ் மொழியின் புகழை உலகிற்கு கொண்டுசேர்க்கிறார்.
அந்த வகையில், மலேசியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம் உலகளாவியது எனவும், தமிழ் இலக்கியங்கள் என்றும் அழியா புகழ் கொண்டது எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி குறிப்பிட்டதும் அரங்கமே கரவொலி எழுப்பியது.
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிப்பது போல், இந்திய நிர்வாகத்திலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத்துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் பெயர்களை உதாரணமாக கூறினார். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து வந்து உயர் பதவிகளை அலங்கரிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
மலேசிய வாழ் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதை உணர்ந்தே மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, தற்போது இந்த உறவை மேலும் வலுப்படுத்த திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
ஒரு முறை மலேசிய பிரதமர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடல் ஒலிக்கப் பட, அதற்கு நடனம் ஆடியும், பாடல் பாடியும் விருந்தினர்களை குஷிப்படுத்தினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பிரதமர் மோடி அதனைத் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். பிரதமர் அன்வர் இப்ராகிம் அருமையான பாடகர் என மோடி பாராட்டு தெரிவிக்க, அவர் உற்சாகத்தின் மிகுதிக்கே சென்றார்.
இறுதியாக, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என தெரிவித்த பிரதமர் மோடி, மிக்க நன்றி என தெரிவித்து உரையை முடித்ததும் அரங்கமே மோடி, மோடி என ஒலித்தது.
















