மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க எஸ்ஐஆர் பிரச்னை தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்ஐஆர் பணிக்கு தகுதியான அதிகாரிகளை மாநில அரசு வழங்கவில்லை என தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேற்கு வங்க அரசும், தேர்தல் ஆணையமும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதாக தெரிவித்தனர்.
இதனால் ஆட்சேபனை மற்றும் கோரிக்கை மனுக்களை சரிபார்க்கும் பணிகள் பாதியில் நிற்பதாக குறிப்பிட்ட அவர்கள், எஸ்ஐஆர் பணிகள் முடியவில்லை என்றால் பெரும் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையமும், மேற்குவங்க அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதனை சரிசெய்ய மாவட்ட நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளை மேற்பார்வையிட நியமிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















