அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாக துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சமீபத்தில் கடிதம் எழுதியது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தியும் காலம் தாழ்த்தி வந்த தமிழக காவல்துறை, விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தது. இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் பணி நியமனங்கள் மற்றும் மாறுதல்களுக்கு லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
அதில், பணி நியமனம் மற்றும் மாறுதலுக்கு ஏழு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, சுமார் 340 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் பணிநியமன விவரங்கள் ஆதாரங்களுடன் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கே.என்.நேருவுக்கு தொடர்புடைய கவி பிரசாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்ணன் ஆகியோரிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, லஞ்ச பணமான 365 கோடி ரூபாய் எந்தெந்த வழிகளில் செலவு செய்யப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளது.
இந்த பணம் ஹவாலா நெட்வொர்க் மூலமாக வெளிநாடுகளுக்கும் கைமாறியுள்ளதையும், சுமார் 223 கோடி அளவுக்கு கட்டுமானத்திலும், 3 கோடிக்கு சொத்துக்கள், இரண்டரை கோடிக்கு தங்கக் கட்டிகள் வாங்கி சேர்த்திருப்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
குறிப்பாக இந்த லஞ்சப் பணத்தில் திமுகவுக்கு வளர்ச்சி நிதியாக 10 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















