தேமுதிக தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்துவிட்டு பின்னர் தங்களை அழைக்குமாறு திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், விசிக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை 3 கட்சிகளும் எதிர்பார்க்கின்றன.
விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. ஆனால் கடந்தமுறை தோல்வி அடைந்ததால் எண்ணிக்கையை குறைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதே தொகுதிகளை தரும்பட்சத்தில் 2 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திமுக கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிகவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப்பின் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் அக்கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக கொடுத்துள்ளது.
மேலும், அக்கட்சிக்கு 8 தொகுதிகள் வரை பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, தேமுதிக தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு தங்களிடம் பேச்சை தொடரும்படி திமுகவிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















