தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக், கனிம வளம் என அனைத்திலுமே திமுக ஊழல் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதே போல மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் கையில் புத்தகத்திற்கு பதிலாக கஞ்சா பொட்டலங்கள் உள்ளதாகவும், உயர் ரக போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இதில் என்.டி.ஏ கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது கண்டன உரையாற்றிய டிடிவி தினகரன், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு பின்னால் திமுக நிர்வாகிகளின் தலையீடு இருப்பதாக விமர்சித்தார்.
நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதே திமுக அரசின் வாடிக்கை என்று கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து தாராளமாக நிதி பெற்றுவிட்டு, நிதியே வழங்கவில்லை என திமுக வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் விமர்சித்தார்.
கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் ஊழல்கள் நடைபெறாத துறைகளே இல்லை எனவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் தமிழகத்தில் செயலற்ற முதலமைச்சராக இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதே போல புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
















