சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கேசினோ திரையரங்கு அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமன்றி பணம் எடுத்துவரப்பட்ட அறிந்த அதிகாரிகள், தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி மின்சார துறையில் பணியாற்றி வந்ததும், சென்னைக்கு மனைவி மாற்றுதல் ஆனதால் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைக்காக தம்பதியை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது, தாம் இன்றே பணியில் சேர வேண்டும் என்று கூறிய பெண் ஆர்டரை அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க காண்பித்தார்.
இதேபோல், பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 12 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பொள்ளாச்சி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ண சாமியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
கரூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொச்சகொட்டாம் பாளையத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். கரூர் பெரிய குளத்து பாளையத்தை சேர்ந்த துரைமுருகன் என்பவர் ஓட்டி வந்த காரில், 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படையினர், அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
















