பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு வரும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அணுகி நிவாரணம் தேடி கொள்ளுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மார்ச் 24க்குள் மனுத்தாக்கல் செய்ய ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டது
மேலும், மாம்பழம் சின்னம் தொடர்பான மனுவை விசாரித்து மூன்று நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளைக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு தெரிவித்துள்ளார்.
மேலும், மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
















