ஐந்து கோடி ரூபாய் வரை, பணம் பேரம் பேசி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த வேட்பாளர் பட்டியலை, ராகுல் காந்தி கிழித்து எறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் 7 தொகுதிகள் மீண்டும் கிடைக்கவில்லை. அந்த எம்.எல்.ஏ.,க்களில், நான்கு பேர் வேறு தொகுதிகளில் போட்டியிட, தலா 50 லட்சம் ரூபாயை, பெங்களூரு தரகர் வாயிலாக, மேலிட தலைவர் ஒருவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நகர் பகுதி தொகுதிக்கு 5 கோடி ரூபாய், ஊரக பகுதி தொகுதிக்கு 3 கோடி ரூபாய் என நிர்ணயித்து, வசூல் வேட்டை நடந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தர, ஒரு கோடி ரூபாய் வரை முன் பணம் பெற்றுள்ளனர்.
பணம் தர விரும்பாத சிலர், டெல்லியில் முகாமிட்டு, மேலிட சிபாரிசில் ‘சீட்’ பெற முயற்சிக்கின்றனர். இந்த பிரச்னை குறித்து விசாரித்த ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடியது தெரியவந்ததும், கோபத்தில், தமிழக காங்கிரசார் அனுப்பிய வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்து விட்டதாக தெரிகிறது.
தொகுதிக்கு இருவர் வீதம், தகுதி அடிப்படையில் தேர்வு செய்து பட்டியல் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
















