ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அணுசக்தி திட்டத்தைக் கைவிட மறுக்கும் ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப் போரை நடத்தி வருகிறது.
ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடர்ந்துவரும் நிலையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்திருப்பதால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது.
உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்தைக் கையாளும் ஹார்முஸ் ஜலந்தியைத் திறக்க அமெரிக்கா ஏப்ரல் 6 ஆம் தேதி வரை அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் ராஜதந்திர பேச்சுவார்தைகளில் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு மற்றும் அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெடிவைத்து முற்றிலுமாக தகர்க்கப்படும் என்றும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே விட்டுவிடுவதாகவும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கான நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்காமலேயே, ஈரான் போரை அமெரிக்கா கைவிடக்கூடும் என்பதையே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.
கடந்த திங்கட்கிழமை அதிபர் ட்ரம்பின் கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தும் வகையில் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா செயல்பட்டு வருவதாகக் கூறினாலும் ஈரான் போருக்கான முக்கிய நான்கு நோக்கங்களில் ஹார்முஸ் ஜலசந்தி இல்லை எனத் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவை விட ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கான தேவைக்கே பயன்படுகிறது என்பதால் தான் ட்ரம்ப் அதை போர் நோக்கமாக கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனாலேயே ஈரானுடனான போருக்கான செலவை அரபு நாடுகள் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டுவார் என்றும் கரோலின் லீவிட் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்துக்கு ஈரானின் நாடாளுமன்றப் பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
















