மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மேற்காசிய போர் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் செளகான், பியூஷ் கோயல், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தொடர்ந்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
போரின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும். இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு துறையினரின் பிரச்னைகளை தணிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
வதந்திகளை தடுக்கவும், உண்மையான தகவல்கள் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் தடையின்றி சென்றடைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
















