மம்தாவின் 15 ஆண்டுகால ஆட்சியில் மீன் உற்பத்தியில் அம்மாநிலம் தன்னிறைவு அடையவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக,இத்தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
கடந்த வாரம் ஹால்தியாவில் நடந்த பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ போலவே பாஜக ஆட்சியமைந்தால் மேற்கு வங்கமும் அதே வளர்ச்சியை அடையும் என்று உறுதியளித்தார்.
மாநிலத்தில் அதிக தேவை இருந்தபோதிலும், மீன் உற்பத்தியில் “தன்னிறைவு” அடையாத மேற்கு வங்கம், மற்ற மாநிலங்களிலிருந்து மீன் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் இதற்கு மம்தாவின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி, கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது.
மீன் போன்ற ஒரு அடிப்படைத் தேவையைக் கூட பதினைந்து ஆண்டு கால ஆட்சியில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசால் வழங்க முடியவில்லை என்றும், அசாம், ஆந்திரா மற்றும் பீகாரில் இருந்து மேற்கு வங்கம் மீன் இறக்குமதி செய்து வருவதாக கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, முன்பு ஆந்திராவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இப்போது இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் 2022-23 நிதியாண்டில், மேற்கு வங்கம் பிற மாநிலங்களிலிருந்து 1.51 லட்சம் மெட்ரிக் டன், 2023-24-ல் 1.36 லட்சம் மெட்ரிக் டன், 2024-25-ல் 1.22 லட்சம் மெட்ரிக் டன் மீன்களை மேற்கு வங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இந்தச் சூழலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் , மக்களின் உணவு உரிமையை பறித்து விடுவார்கள் என்றும், குறிப்பாக மேற்கு வங்க மக்களுக்குப் மிகவும் பிடித்தமான மீன் மற்றும் இறைச்சி உண்ணுவதைத் தடை செய்து விடுவார்கள் என்றும் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேற்கு வங்க மக்கள் மீனை வெறும் உணவாக மட்டுமில்லாமல் தங்கள் பாரம்பரியத்துக்கும் பெருமைக்கும் அடையாளமாக வைத்துள்ளனர்.
எனவே மீனைப் பற்றி பேசி பிரதமர் மோடி மேற்கு வங்க மக்களின் உணர்வோடு பாஜகவை கொண்டு சேர்த்துள்ளார்.
பிரதமரின் வழியாக மீன் உணவைப் புகழ்ந்தும், மேற்கு வங்க மக்களின் பாரம்பரியத்தைப் போற்றியும் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர்கள் மீன் சந்தைகளுக்குச் செல்வதும், மீன் வாங்குவதும், அதைப் பொது வெளியில் உண்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
ராஜர்ஹாட்-கோபால்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தருண்ஜோதி திவாரி, மீன் சந்தைக்குச் சென்று பிரச்சாரம் செய்ததுடன், அங்கே மீன் சாதம் சாப்பிட்டுக் கொண்டே பேட்டியளித்துள்ளார். மாநில பாஜகவின் மூத்த தலைவரும், கரக்பூர் நகர தொகுதி வேட்பாளருமான திலீப் கோஷ், மீன் சந்தையில் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
இதனால் பாஜகவுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூகம் மக்களிடம் எடுபடவில்லை என்று கூறப்படுகிறது.
















