திருவண்ணாமலை கோயிலில் தங்கள் மத அடையாளமான தொப்பி அணிந்த இஸ்லாமியரை அழைத்துச் சென்ற விவகாரத்தில், அமைச்சர்கள் ரமேஷ், ஆதவ் அர்ஜுனாவுக்கு, பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கொடிமரம் தாண்டி ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைய அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வேளை, ஹிந்து அல்லாத ஒருவர் வழிபட விரும்பினால், தனக்கு அந்த கடவுளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், ஹிந்து கலாச்சாரம் மற்றும் கோயிலின் விதிகளை பின்பற்றுவதாகவும் எழுத்து பூர்வமாக தெரிவிப்பதோடு அந்த கோயிலின் பதிவேட்டில் பதிய வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த இஸ்லாமியர் சட்டப்படி ஹிந்து கடவுளை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதிமொழியை எழுதி கொடுத்தாரா?
என்றும் வினவியுள்ளார்.
இதேபோன்று மற்ற வழிபாட்டு தலங்களில் நடைபெற்றால் அந்த விதிகளை அமைச்சர்கள் மீறுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கிறார்களே என்று தமிழக அரசியல்வாதிகள் பொங்கியெழுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மதிக்காத அமைச்சர்கள் எப்படி சட்டத்தை அமல்படுத்துவார்கள்? என்றும் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
















