நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்றும் அவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி ஐபி எக்ஸ்டென்ஷன் பகுதியில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி அம்பு எய்தி ராவண உருவ பொம்மையை எரித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள் ராமரை நமது முன்னோர்களும், இந்தியாவும் வழிபட்டனர் என்றும் மனிதகுல வரலாற்றில் ஈடு இணையற்ற லட்சியங்களை ராமர் நமக்கு வழங்கியதால் இந்த நம்பிக்கை உண்டானது எனவும் கூறினார். ராமர் தன் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், சத்தியம் மற்றும் கொள்கையின் பாதையை கைவிடவில்லை என்றார்.
ராமரின் வாழ்க்கை நமக்கு ஒரு ஆழமான பாடத்தை வழங்குகிறது என்றார். நெருக்கடி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சவால் எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்தாலும், நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என கூறினார்.
வளர்ந்த இந்தியா மற்றும் தன்னிறைவு பெற்ற பாரதம் ஆகிய இலக்குகளை நாம் முன்வைத்துள்ளோம் என்று கூறிய பிரதமர், நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள், அவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிட்டார். பகவான் ராமரின் ஆட்சிக் காலமான ‘ராமராஜ்யம்’ என்பது பாரபட்சமற்ற நீதி, சமத்துவம் மற்றும் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
















