இந்திய தொழில் நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளைக் குவிக்க, பல்வேறு சலுகைகளை தலிபான் அரசு வாரி வழங்கியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வந்த பாகிஸ்தான், ஏமாற்றம் அடைந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….
சமீபகாலமாகப் பாகிஸ்தான் வழியாக வர்த்தம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு, ஆப்கான் நிறுவனங்களுக்குத் தலிபான் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்தியா – ஆப்கானிஸ்தான் உறவால் புகைச்சல் அடைந்துள்ள பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பொறுப்பேற்ற பின், இந்தியாவுடனான உறவு தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது.
இதனால், வயிற்றெரிச்சல் கொண்டுள்ள பாகிஸ்தான் புறவாசல் வழியாகப் பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறது. எங்கள் கண்ணில் மண்ணை தூவித் தான், இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகம் நடைபெற வேண்டும் எனப் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டிருக்க, உன் சாவகாசமே வேண்டாம்… நாங்கள் வேறு வழியை பார்த்துக் கொள்கிறோம் என இந்தியாவும் – ஆப்கானிஸ்தானும் அதிரடி காட்டி வருகின்றன.
ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகம் வழியாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியா – ஆப்கானிஸ்தான் நாடுகள், ஒரு பில்லியன் டாலர் இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கின்றன. இதனை மேலும் வலுப்படுத்த எண்ணி, சரக்கு விமான போக்குவரத்து சேவையையும் தொடங்கி வர்த்தகத்தைப் பெருக்க இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன.
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் நூருதின் அசிசியின் இந்திய பயணத்தில் இது உறுதியாகியிருக்கிறது. டெல்லி – காபூல் , அமிர்தசரஸ் – காபூல் இடையே விமான போக்குவரத்து சேவை தொடங்குவதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இதனிடையே, கடல் மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டிருப்பதால், இந்திய தொழில் நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளை குவிக்க தலிபான் அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க கண்ணைக் கட்டிக் கொண்டு பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கிறது. குறிப்பாகக் கனிமவளம், விவசாயம், மருந்து உற்பத்தி, எரிசக்தி, ஜவுளித்துறை சார்ந்த முதலீடுகளை எதிர்பார்க்கும் ஆப்கானிஸ்தான், இலவச நிலம், போதுமான மின்சார வசதி, புதிய தொழில் நிறுவனங்களுக்குப் பூஜ்ஜிய வரி எனச் சலுகைகளை அள்ளி வீசியிருக்கிறது. இந்து மற்றும் சீக்கிய மதத்தினரும், நாட்டின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனத் தலிபான் அரசு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் ஆப்கானிஸ்தானில் இந்தியா ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை உணர முடிகிறது.
எந்தக் குட்டிக்கரணம் போட்டாலும் பாகிஸ்தானின் தகிடுதத்த வேலைகள் பொய்த்துபோகும் என்பதையே இன்றைய சூழல் வெளிக்காட்டுகிறது. அண்மையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலால், இருநாடுகளுக்கும் சேர்த்து 100 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்ட நிலையில், வன்முறை பாதையில் பயணிக்க விரும்பாத ஆப்கானிஸ்தான் இந்தியாவின் தோழனாக உருவெடுத்திருப்பது, சர்வதேச அரசியலில் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.
















