சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 3ல் ஆசிய ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது.
இந்த ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது.
செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி முன்னோட்டமாக அமைந்துள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது.
ஆசியாவின் முன்னணி அணிகளான ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் சர்வதேச தரத்தில் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா அணி இரண்டு முறை (2011, 2016) சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.