இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய வீரர்கள், நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரசிகர்களுக்கு இந்திய அணி அதிர்ச்சியளித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது.இதை தொடர்ந்து 356 ரன்கள் பின்னடைவுடன் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, சர்பராஸ் அகமது, ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 462 ரன்களை எட்டியது.
இதோடு 4ம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதையடுத்து 107 ரன்கள் இலக்குடன் 5ம் நாளில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது.