108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் .
பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது. ஆண்டாள் ஜென்ம நக்ஷத்திரமான ஆடிப் பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது .
இதனை முன்னிட்டு மாட வீதிகள் சுற்றி கொடிபட்டம் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது.கோயிலின் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுக் கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் இரங்கமன்னாருக்குச் சிறப்பு பூஜை நடைப்பெற்றது .
இன்று தொடங்கிய இந்த விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
தொடர்ந்து இனி நாள்தோறும் ஆண்டாள் இரங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும் நாள்தோறும் இரவு வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலாக்கள் நடைப்பெறும் .
ஆடிப்பூரப் பந்தலில் பெரியாழ்வார் மங்கள சாசனமும் ,கருட சேவையும் நடக்கிறது.
மேலும் சயனத் திருக்கோலத்தில் ஆண்டாள் இரங்கமன்னார் கிருஷ்ணன் கோயிலில் உள்ள சயன மண்டபத்தில் சயனிக்கும் சயனசேவை உற்சவமும் நடைபெறுகிறது.
தேரோட்ட நாளில் அதிகாலையில் ஆண்டாள் இரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
அதன் பிறகு ஆண்டாள் இரங்கமன்னார் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப் பட்ட பெரிய திருத்தேரில் எழுந்தருளுகின்றனர்.அதன் பிறகு தேரோட்டம் திருவிழா நடைபெறுகிறது.
பூமியில் துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைந்து தன்னையே மணந்த சூடிக் கொடுத்த சுடர்க் கொடிக்கு ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆண்டு தோறும் ஆடிப் பூரத்தில் பட்டு வஸ்திரம் கொடுப்பது உண்டு .அந்தப் பட்டு வஸ்திரத்துடன் தன ஆண்டாள் தேரில் எழுந்தருளி வருவாள்.
இந்த ஆண்டு ஆடிப் பூரம் திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
திருவிழாவை ஒட்டி ஸ்ரீ வில்லிபுத்தூரே விழாக் கோலம் கொண்டுள்ளது.