சென்னையில் நேற்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா முத்தையா அரங்கில், ஜனம் தமிழ் டிவி’யின் டிஜிட்டல் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஜனம் தமிழ் டிவி’யின் டிஜிட்டல் ஒளிபரப்பை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
ஜனம் தொலைக்காட்சி மலையாளத்தில் ஜனம் மலையாளம் என்ற பெயரில் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே கேரளாவில் செய்திக்கான தளத்தில், தனி முத்திரை பதித்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழில், ஜனம் தமிழ் என்ற பெயரில் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் தேசம், தெய்வம், தமிழ் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்படவுள்ள ஜனம் தமிழ் டிவியின் லோகோவை, விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளியிட்டனர்.
முதல்கட்டமாக ஜனம் தமிழ் டிவி’யின் டிஜிட்டல் YouTube-ஐ இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஜனம் தமிழ் டிவி’யின் டிஜிட்டல் Face book- ஐ சக்தி மசாலா அதிபர்கள் பி.சி. துரைசாமி & சாந்தி துரைசாமி தொடங்கி வைத்தனர். ஜனம் தமிழ் டிவி’யின் டிஜிட்டல் Instagram- ஐ கு. ஞானசம்பந்தன் தமிழறிஞர் தொடங்கி வைத்தார்.
ஜனம் மலையாள டிவியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார், ஜனம் டிவியின் வரலாற்று குறும்படத்தை வெளியிட்டு பேசினார். ஒரே நாடு இதழின் ஆசிரியர் நம்பி நாராயணன் ஜனம் தமிழ் டிவி குறித்து அறிமுக உரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகை செல்வன், மாநிலத் தலைவர் இந்து முன்னணி காடேஸ்வரா சி. சுப்பிரமணியன், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், பாஜக சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் IPS (ஓய்வு), தமிழறிஞர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார், சக்தி மசாலா அதிபர்கள் பி.சி. துரைசாமி & சாந்தி துரைசாமி, பின்னணி பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஜனம் தமிழ் டிஜிட்டல் ஒளிப்பரப்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரத்தின் இறை வணக்கம் இடம்பெற்றது.