சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய சென்னை சைதாப்பேட்டை வீடு, விழுப்புரம் வீடு, சூர்யா பொறியியல் கல்லூரி
மகன் நடத்திவரும் ஐ.டி.சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் என் தகவல் வெளியாகியுள்ளது.
2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது அப்போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்த வகையில் தமிழக அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டுஅவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அதிமுக ஆட்சியில் 2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனைகள் குறித்த முழு விவரங்களும் விரைவில் தெரிய வரும்.
வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.