நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
நாடாளுமன்ற அலுவலகங்கள் சுமுகமான முறையில் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடி உள்ள நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் மத்திய அரசு விவாதிக்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி,
மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். இந்தியாவில் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் பெண்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றும் மணிப்பூர் சம்பவத்தால் இதயம் கனத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் உச்ச நீதிமன்றம் தலையிடும். மணிப்பூர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மணிப்பூர் சம்பவம் குறித்து, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்யுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.