இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கடந்த 19 ஆண்டுகளில் நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக புற்றுநோயால் பாதித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் ஆண்களிடையே 0.19% குறைந்துள்ளது. ஆனால் அதேநேரத்தில் பெண்களின் 0.25% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரு பாலினத்தை சேர்த்து 0.02%-ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 93 ஆயிரத்து 536 பேருக்கு பாதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புற்றுநோய் இறப்பிலும் உத்தரபிரதேசம் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 50 ஆயிரத்து 841 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்குகிறது. இதில் புற்றுநோய், மேற்படி திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். புற்றுநோய் தடுப்புக்கான உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்பகால நோயறிதல் போன்றவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. சிகிச்சைக்காக நோயாளிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அளித்துள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இது 2021-ம் ஆண்டு 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆக அதிகரித்து, 2022-ம் ஆண்டு 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.
அதைப்போல் புற்றுநோய் இறப்புகளை எடுத்துக்கொண்டால் 2020-ம் ஆண்டு 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021-ம் ஆண்டு 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022-ம் ஆண்டு 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் இறந்துள்ளனர்.