தமிழகத்தில் பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த ஒவ்வொரு வீடுமே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரியாக உள்ளது என்று என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடக்க விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளையும் 168 நாட்களில் பாதயாத்திரையாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுக் காலத்தில் தமிழகம் பெற்ற பயன்களை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்து சொல்ல உள்ளார். இந்த பாத யாத்திரையின் தொடக்க விழா நேற்று இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் பாதயாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற இவ்விழாவில் பேசிய அண்ணாமலை,
இந்தப் பாத யாத்திரை, வெறும் அண்ணாமலையின் பாத யாத்திரை அல்ல. இது ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனின் பாத யாத்திரை. கூட்டணிக் கட்சியினரின் பாத யாத்திரை. இது ஒரு வேள்வி, இது ஒருதவம், இது ஒரு சங்கல்பம், சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரை நடந்தே வந்தார். அதே போல் அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தர் இராமேசுவரத்தில் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்றார். இந்த வார்த்தையை, மெய்ப்பட வைத்தவர், பிரதமர் நரேந்திர மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவைப் பெருமைப்பட வைத்து வருகிறார். கோடிக்கணக்கான இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறார். பிரதமர் ஒரு சாதாரண மனிதர், எனவேதான் அவர் சாதாரண மனிதர்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்திற்கு இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.
மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார், தமிழை நேசிக்கிறார், திருக்குறளை உலகம் எங்கும் எடுத்துச்செல்கிறார். திருக்குறள் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதனை 100 மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார் .
தமிழகத்தில் பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த ஒவ்வொரு வீடுமே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரியாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவைத் தன் மூச்சாக கொண்டுச் செயல்படுகின்ற நாம் பிரதமர் நரேந்திர மோடி, 2024 ல் மீண்டும் பிரதமராக வர வேண்டும். 3-வது முறை அவர் பிரதமராக அமரும் போது இந்தியா 3-வது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்தப் பாத யாத்திரைக்குத் தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது. மாற்றும் . இவ்வாறு அவர் பேசினார்.