இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “வாரிசு அரசியல் என்பது இயல்பாகவே ஜனநாயகத்துக்கு விரோதமானது மற்றும் பொறுப்பற்றது. வாரிசு அரசியல் என்பது என்னவென்றால், ஒரு தலைவர் மறைந்து விட்டால் அவருக்குப் பிறகு அவரது மகனோ அல்லது மகளோ அக்கட்சியின் தலைவராக வருவார்கள். கட்சியின் தலைவராக மட்டும் இருந்து விட்டால் பரவாயில்லை. அதன் பிறகு, அவர்கள் தங்களது தகுதியையும், திறமையையும் பொருட்படுத்தாமல் மாநில முதல்வர் வேட்பாளராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ போட்டிக்கு வருவார்கள்.
அந்த வகையில்தான், தற்போது ராகுல் காந்தியும் பிரதமர் வேட்பாளருக்கு போட்டி போடுகிறார். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா என்பதைக் காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் வாரிசு அரசியல் நிலைதான் நிலவுகிறது. தங்களது தகுதியையும், திறமையையும் பற்றி துளியும் சிந்திக்காமல் முதல்வர் வேட்பாளருக்கும், பிரதமர் வேட்பாளருக்கும் ஆசைப்படுகிறார்கள்.
முதலில், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால், வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆகிய நோய்கள் விலக வேண்டும். இதைத்தான் முக்கியப் பிரச்சாரமாக பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். “பரிவார் க்விட் இந்தியா” என்பது தான் அது. அதாவது, “துர்நாற்றம் வீசும் ஊழல் அரசியல் வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு,” “வாரிசு அரசியலே இந்தியாவை விட்டு வெளியேறு” என்பதுதான் பிரதமரின் முக்கிய பிரசாரமாகும்” என ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.