செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மறுநாள் (14-ம் தேதி) அதிகாலை அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை என சம்பவங்கள் அரங்கேறி முடிந்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்ட முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல் நிலையை காரணம் காட்டி இதுவரை அசோக் குமார் ஆஜராகாமல் இருந்தார். இந்தச் சூழலில், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் பகுதியில் அசோக் குமார் புதிதாக பிரம்மாண்ட வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த வீட்டிற்குத் தேவையான கிரானைட் கற்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன எனவும், இவை மிகவும் விலை உயர்ந்தது எனவும் தகவல்கள் பரவின.
மேற்கண்ட வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்திய நிலையில், அதே வீட்டில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கரூர் செங்குந்தபுரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் நண்பரும் ஆடிட்டருமான சதீஷ்குமார் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது . இது தவிர, புதிய வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அசோக் குமார் மனைவி நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு, நேரில் ஆஜராக , புதிய வீட்டில் சம்மனை ஒட்டியிருக்கிறார்கள்.அசோக் குமார் புதிதாக வீடு கட்டி வரும் மேற்கண்ட இடம், அவரது மனைவி நிர்மலா பெயரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த இடம் 25 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் , அதை 10.85 லட்சம் ரூபாய்க்கு நிர்மலா பெயரில் பத்திரம் பதிவு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் . இதுகுறித்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
அடுத்து,அவரது தம்பி அசோக் குமார் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி இருப்பதும், அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.