என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பாரதப் பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டின் வளர்ச்சி மீது பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது. இதுதான் இப்போதைக்குத் தேவை. அதோடு, நாங்கள் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவாக மாற்றி இருக்கிறோம். இந்திய இளைஞர்கள் மீது பா.ஜ.க.வுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கிறோம். இந்தியாவில் வறுமை வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. 35 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். சுத்தமான குடிநீர் கொடுத்து 4 கோடி உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது. பொதுத்துறை வங்கிகளின் லாபம் 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஹெச்ஏஎல் நிறுவனத்தின் எதிர்காலம் மங்கிவிடும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி லாபம் ஈட்டியது.
அதேபோல, எல்.ஐ.சி. குறித்தும் எதிர்க்கட்சிகள் சந்தேமடைந்தன. ஆனால், எல்.ஐ.சி. நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்குத் தெரியும் இந்தியாவின் வளர்ச்சி. ஆனால், எதிரில் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை. எங்களது சாதனைதான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. எங்களது சாதனை 1,000 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். இனிவரும் நூற்றாண்டு இந்தியாவுக்கானது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதேசமயம், பா.ஜ.க.விடம் என்ன கேள்வி கேட்க வேண்டும், எப்படிக் கேட்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை. அதோடு, காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. மேலும், காங்கிரஸ் கட்சியில் தொலைநோக்கு சிந்தினை கொண்ட தலைவர்கள் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உறக்கத்தில் இருந்தது. இந்தியாவின் எதிர்காலம் குறித்து காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சிக்குக் கடின உழைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.
விமர்சனம் செய்வதில் மிகக்கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்திருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாகவே என்னை அவமானப்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகள் வேலையாக இருக்கிறது. என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல் இருக்கிறது போலும். கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிகவும் மோசமாக விமர்சித்தன. எதிர்க்கட்சிகளின் வசவுகளை நான் வாழ்த்துக்களாக ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும், எதிர்க்கட்சிகள் யாரைத் திட்டுகிறார்களோ, அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து விடுவார்கள். அந்த வகையில், நான் 2024-ல் மீண்டும் பிரதமராவேன். அப்போது, என்னுடைய 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும்” என்று கூறினார்.