ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய பாரதப் பிரதமர் மோடி, “ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் முதல் நாள் ராகுல் காந்தி பேசாதது ஏன் என்பது தெரியவில்லை. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருந்தும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பேச வாய்ப்பு அளிக்காதது ஏன் என்பதும் தெரியவில்லை.
கட்சியை விட தேச நலனை முக்கியமாகக் கருத வேண்டும். தேசத்தின் பலம் மீது காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியய தாக்குதல் நடத்தியபோதுகூட, அதை காங்கிரஸ் அரசியலாக்கியது. இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பூசியைக் கூட காங்கிரஸ் நம்பவில்லை. பெரும்புரட்சியை ஏற்படுத்திய டிஜிட்டல் இந்தியா திட்டத்தைக்கூட காங்கிரஸ் கிண்டல் செய்தது. பாகிஸ்தான் என்ன சொல்கிறதோ அதைத்தான் காங்கிரஸ் நமபுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்தது கிடையாது.
தமிழக மக்களுக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் 1962-ல் தான் காங்கிரஸ் கடைசியாக வெற்றிபெற்றது. அதேபோல, மேற்குவங்கம், திரிபுரா, ஒடிஸா மாநில மக்களும் காங்கிரஸை நம்பவில்லை. மேற்குவங்கத்தில் 1972-ம் ஆண்டோடு காங்கிரஸின் சகாப்தம் முடிந்து விட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் சிக்கி இருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கென தனித்தன்மை கிடையாது. கட்சியின் கொடி, சின்னம் கூட திருடப்பட்டது தான்.
அதேபோல, சோனியா குடும்பம், காந்தி பெயரை பயன்படுத்தி வருகிறது. காந்தி என்கிற அந்தப் பெயரும் திருடப்பட்டது தான். காங்கிஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல, ஈகோ கூட்டணி, அகங்காரக் கூட்டணி.
ராகுல் காந்தி 24 மணிநேரமும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார். பாரத மாதா குறித்து ராகுல் பேசியதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. நாடு 3 துண்டுகளாகப் பிரிய காரணமாக இருந்தவர்கள் பாரத மாதா கொலை செய்யப்பட்டதாகப் பேசுகிறார்கள். இப்படி எப்படி அவர்களால் பேச முடிகிறது. பாரத மாதா குறித்து பேசியதில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
வந்தே மாதரம் என்கிற முழக்கத்தையும் காங்கிரஸ் கட்சி அவமானப்புடுத்தி இருக்கிறது. பொய் மூட்டைகளின் கடையாகவும், கொள்ளைக் கூடாரமாகவும் காங்கிரஸ் விளங்குகிறது. காங்கிரஸின் கடை விரைவில் இழுத்து மூடப்படும். உண்மையைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன. எதிர்க்கட்சிகள் செய்வது எல்லாமே அரசியல்தான். அவர்கள் மனதில் வேறொன்றும் இல்லை. அரசியலை கடந்து காங்கிரஸால் எதையும் சிந்திக்க முடியாது. 5 வருடம் வாய்ப்பளித்தும் ஆட்சியில் அமர எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை. நாட்டு மக்களுக்கு நீங்கள் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் தரவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. அதன் இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் அனுசரிக்கப்பட்டது. இதில் நீங்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டீர்கள். எதிர்க்கட்சிகள், கூட்டணியின் பெயரை மாற்றினாலும் ஆட்சிக்கு வரமுடியாது. இந்தியா கூட்டணியில் அணைவருக்கும் பிரதமர் ஆசை இருக்கிறது. எதிர்க்கட்சிகள் முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கூட்டணி. நிலைப்பாடு.
2014-ஆம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.