மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 8, 9-ம் தேதிகளில் நடந்தது. அப்போது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். இதற்கு மத்திய அமைச்சர்கள் சிலர் விளக்கம் அளித்து பதிலடி கொடுத்தனர்.
இந்தச் சூழலில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து பேசிய மோடி, “2018-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு மீது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதில், அவர்கள் படுதோல்வியைச் சந்தித்தனர். தற்போது, மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.
ஒருமுறை “நோ பால்” போட்டால் பரவாயில்லை. திரும்ப திரும்ப “நோ பால்” வீசுவது ஏன்? எங்களது அரசு சதமடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் “நோ பால்” வீசிக்கொண்டிருக்கின்றன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. இதே போல, 2028-ம் ஆண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்கள். அப்போதும் இத்தீர்மானம் தோல்வியைத்தான் தழுவும்” என்று கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்து விட்டனர். பிரதமர் பேசி முடித்ததும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க யாரும் இல்லாததால், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.