பிரதமர் நரேந்திர மோடி நாளை, மத்தியப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகல் 2:15 மணியளவில் சாகர் மாவட்டத்திற்குச் செல்கிறார். அங்கே, சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவிடத்தில் பூமி பூஜை செய்கிறார். பிற்பகல் 3:15 மணியளவில், தனாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார், அங்கு அவர் சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் தனது பயணத்தின் சிறப்பு அடையாளமாக முக்கிய துறவிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளைக் கௌரவிக்க உள்ளார்.
தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, 11.25 ஏக்கர் பரப்பளவில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவகம் கட்டப்பட உள்ளது. இந்த அற்புதமான நினைவிடத்தில் சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் அவர்களின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் போதனைகளைக் காட்சிப்படுத்த ஒரு ஈர்க்கக்கூடிய கலை அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சியகம் அமைக்கப்படும். நினைவிடத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளும் இடம் பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
கோட்டா-பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் . ரூ.2475 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த்த் திட்டம் இராஜஸ்தானின் கோட்டா மற்றும் பரன் மாவட்டம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் குணா, அசோக்நகர் மற்றும் சாகர் மாவட்டம் வழியாக செல்கிறது. கூடுதல் ரயிலின் பாதை சிறந்த இயக்கத்திற்கான திறனை அதிகரிக்கும் மற்றும் பாதையில் இரயிலின் வேகத்தை மேம்படுத்த உதவும்.
ரூ.1580 கோடி மதிப்பிலான 2 சாலை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் மோரிகோரி – விதிஷா – ஹினோதியாவை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் மற்றும் ஹினோதியாவை மெஹ்லுவாவுடன் இணைக்கும் சாலைத் திட்டம் ஆகியவை அடங்கும்.