தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக.18) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 19, 20, 23-ம் ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆக.17-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ.,பொன்னேரியில் 4 செ.மீ., ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், கத்தி வாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.