சென்னை மணலி அருகே பாதுகாப்பற்ற முறையில் 38 லாரிகளில் இருந்த 500 டன் வெடிப்பொருட்களைச் சோதனை செய்து பாதுகாப்பாக, திருவொற்றியூர் கன்டெய்னர் பெட்டகம் கையாளும் நிலையத்திற்கு காவல் துறை அனுப்பி வைத்தது.
சுமார் 25 லாரிகளில் மலையை உடைக்கும் வெடிபொருட்கள், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறை கொட்டும் மலையையும் பொருட்படுத்தாமல் சென்னை மணலிக்கு அருகே புதுநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குறிப்பிட்ட அந்த இடத்தைச் சோதனை செய்தனர்.
அந்தச் சோதனையில் 38 லாரிகளில் 500 டன் வெடி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது பற்றி உரிமையாளர் சுகுமாரனை விசாரித்ததில், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர், பாரத் நகரில் இயங்கும் மத்திய அரசு அனுமதிபெற்ற நிறுவனமான, ‘சோலார் இன்டஸ்ரியல் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தில் இருந்து, சென்னைக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வந்து கப்பல் மூலம் துருக்கிக்கு வெடிபொருட்கள் அனுப்பும் அனுமதி இருப்பதாகக் தெரிவித்தார்.
காவல்துறைச் சோதனையில் ஆவணங்கள் சரியாக இருந்தன. இருப்பினும், ஒரே இடத்தில் இவ்வளவு வெடிபொருட்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருக்க வேண்டாமெனக் கூறி, அந்த கண்டெய்னர் லாரிகளை சுங்க வரி அதிகாரிகளுக்குக் கட்டுப்பாட்டில் உள்ள திருவொற்றியூர் கன்டெய்னர் பெட்டகம் (concor yard) கையாளும் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.