இடங்களை வரைபடத்தில் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம், அதற்காக, அப்பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமாகி விடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதையொட்டி, இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என்று பெயரிட்டும், கடந்த 1962-ம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக்ஷாய் சின் என்றும் சீனா கூறியிருந்தது. அதேபோல, தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீனக் கடல் பகுதியையும் தனதுப் பகுதியாக தெரிவித்திருந்தது. இதே பகுதியை வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடத்திற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “சீனா தங்களுக்குச் சொந்தமில்லாதப் பகுதிகளைத் தங்களுடையது என்று கூறி வரைபடங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இது ரொம்ப காலமாகவே அவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளைச் சேர்ந்து வரைபடங்களை வெளியிடுவதால் எதுவும் மாறாது. இவ்வாறு அபத்தமாக உரிமைகோருவதன் மூலம் மற்ற நாடுகளின் பிரதேசங்கள் சீனாவுக்குச் சொந்தமாகிவிடாது” என்று சாடினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “சீனாவின் வரைபடம் குறித்து ஜனநாயக முறையில் அந்நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடிப்படையற்ற அவர்களின் கூற்றுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாதப் பகுதி. புதிதாகப் பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. சீனாவின் இந்த நடவடிக்கை எல்லை பிரச்சனைக்கான தீர்வுகளை மேலும் சிக்கலாக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எல்லைப் பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் கவலையளிக்கிறது. இந்தியா – சீனா உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்” என்று வலியுறுத்தியதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த சூழலில், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கோரி சீனா வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.