பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரத்தின் தலைமை அதிகாரியாக முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் எம்.சுரேஷ் குமார் இருந்து வந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு புதிய தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார். 2005-ம் ஆண்டு இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியாக பொறுப்பேற்ற ஸ்ரீவஸ்தவா, இப்பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சுரேஷ் குமார் விரைவில் டெல்லி திரும்புவார் என்றும், கீதிகா ஸ்ரீவஸ்தவா விரைவில் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, இரு தரப்பு இராஜதந்திர உறவுகளை குறைக்க பாகிஸ்தான் முடிவு செய்தது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தூதரகங்கள் தூதர்கள் இல்லாமலேயேச் செயல்பட்டு வருகின்றன. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தலைமையில் தூதரகங்கள் இயங்கி வருகின்றன. இந்தச் சூழலில், புதிய தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அஜய் பிசாரியா தூதராக இருந்தார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும், அவர் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார். 1947-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீபிரகாசா, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முதல் தூதராகப் பொறுப்பேற்றார். இதன் பிறகு, பாகிஸ்தானில் 22 பேர் இந்தியத் தூதர்களாக பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.