ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கும் நிகழ்வினை நேரில் பார்க்க விரும்புபவர்களுக்காக இஸ்ரோ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தற்போது தென்துருவத்தில் தரையிறங்கி தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இலக்காகச் சூரியனை ஆராயும் நோக்கில், ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் 2-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, வரும் சனிக்கிழமை பகல் 11:50 மணியளவில் ஆதித்யா எல்1 செயற்கைகோளைச் சுமந்துகொண்டு, பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய்வதற்கு பிரத்தியேகச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. அந்த வரிசையில் சூரியனை ஆராய்வதற்காக பிரத்தியேக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நாடு எனும் பெருமையை, ஆதித்யா எல்1 மூலம் இந்தியா பெற உள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவம் வரலாற்று நிகழ்வினைக் காண பத்தாயிரம் பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் ஸ்ரீஹரிகோட்டாவில் அதற்கான இடத்தை இஸ்ரோ அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாகப் பார்க்க விரும்புபவர்கள் https://lvg.shar.gov.in என்கிற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து அதற்கான சீட்டை பெற்றுக் கொள்ளும்படி இஸ்ரோ தெரிவித்துள்ளது.