ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, டெல்லியிலுள்ள பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். அப்போது, ஒரு குழந்தை முத்தமிட, பிரதமர் மோடி குனிந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
ரக்ஷாபந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ரக்ஷாபந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். சமையல் எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்” என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியிலுள்ளப் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியைகளும் பிரதமருக்கு ஆர்வமுடன் ராக்கிக் கயிறு கட்டி மகிழ்ந்தனர். சில குழந்தைகள் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ராக்கிக் கயிறுகளை கட்டினர். இதைக் கண்டு பிரதமர் மோடி நெகிழ்ந்தார். அப்போது, ஒரு குழந்தைப் பிரதமருக்கு முத்தமிட வரவே, குனிந்து மகிழ்ச்சியுடன் முத்தத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், குழந்தைகளின் பெயர்களை தனித்தனியாகக் பிரதமர் கேட்டு தெரிந்துகொண்டார். தொடர்ந்து, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுடன் சேர்ந்து பிரதமர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த படத்தையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதேபோல, ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப் படையினருக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.