ரக்ஷா பந்தன் விழா இன்றும் நாளையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் வண்ணமயமான கயிறுகளைக் கட்டி, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். பதிலுக்கு, சகோதரர்கள் தங்கள் சகோதரிகளைப் பாதுகாப்பதாகவும், ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்து அவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்கள்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் அனைத்து மக்களுக்கும் ரக்ஷா பந்தன் திருநாள் வாழ்த்துகள்!. இது சகோதரர் சகோதரியின் அழியாத அன்பின் அடையாளமாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பெண்களுக்குப் பாதுகாப்பான, சமமான சூழலை உருவாக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், சகோதர, சகோதரிகளை இணைக்கும் அன்பின் அழகான பிணைப்பை ரக்ஷா பந்தன் உள்ளடக்கியுள்ளது. இந்த பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும், அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.