சிவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க இந்தியா – நியூசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித் துறை அமைச்சர் டேமியன் ஓ’கானர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால் மற்றும் நியூசிலாந்து உயர் ஆணையர் டேவிட் பைன் ஆகியோர் மேற்கண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், “இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே சிவில் விமானச் சேவைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இது, இரு நாடுகளும் தங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமாகும். நியூசிலாந்தில் மேலும் 3 இடங்களுக்கு விமானப் போக்குவரத்தை இயக்க இந்தியா அனுமதி கோரி இருக்கிறது” என்றார்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து அரசால் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 6 நகரங்களுக்கு இயக்கப்படும். அதேபோல, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள், ஆக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளது.