ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள்.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் சிறப்பம்சமே, ஜி20 டெல்லி பிரகடனம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக நாடுகள் பலவும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அளித்திருக்கும் பேட்டியில், “உலகின் முக்கிய 20 நாடுகளின் தலைவர்கள் ஒரு நாட்டிற்கு வருகை தரும்போது, அது அந்த நாட்டிற்கு மிகவும் பெருமையானதாகும். அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருப்பது, இந்தியாவுக்குப் பெரும். மேலும், இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் அதிக பயனடையும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, மற்றொருவர் கூறுகையில், “ஜி20 உச்சி மாநாடு இந்தியா தலைமையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாங்கள் வெளிநாட்டுக் கொள்கையில் தோல்வியடைந்ததாகக் கருதுகிறேன். பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசமான நிலையில் இருந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
இன்னொருவர் அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் எங்களது பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்யும்போது, இந்தியா சக்தி வாய்ந்த உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து ஜி20 உச்சி மாநாட்டை நடத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்தியா சிறந்த அடியை முன்னெடுத்து வைத்திருக்கிறது. இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் தருணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ஒருவர் கூறுகையில், “ஜி20 மாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவர், பாகிஸ்தானுக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் வரவில்லை. ஒரு மிகப்பெரிய மாநாட்டை இந்தியா நடத்தி முடித்திருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Pakistan: Another local says, “I think we have failed in our foreign policy and because of this the G-20 summit is being held in our neighbouring country and heads of state are coming. In the last 5-6 years our economy and the security situation have deteriorated. The… pic.twitter.com/HFhwPhWPtg
— ANI (@ANI) September 14, 2023