ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரியானா மாநிலம் நூ பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி, பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, யாத்திரையை தடுத்து நிறுத்தியது. மேலும், வீடு, கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றின் மேல் நின்று கொண்டு, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இஸ்லாமிய இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைத்தனர்.
இதையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் தரப்பு, காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், அருகிலிருந்து கோவில்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால், அப்படியும் விடாத இஸ்லாமிய இளைஞர்கள் குழு, காவல்நிலையத்துக்கும் தீவைத்தது. இக்கலவரத்தில் ஒரு ஊர்க்காவல்படை வீரர், ஒரு காவலர், இந்து அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வன்முறைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர், பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.