நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4இல் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணைய மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடு டெல்லி இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெமாக்ரசி அண்ட் தேர்தல் மேனேஜ்மென்ட்டில் (IIIDEM) இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதி பட்டியல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதில் தமிழகம் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பங்கேற்றுள்ளார்.