ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் குளித்து, காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில் தெற்கில் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தமும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆலயத்தில் 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தில் இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள் கிணறுகளாக அமைந்துள்ளன. வெளியே இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள், கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அக்னி தீர்த்தம் எனும் கடலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் கோவிலில் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் சமுத்திரத்தில் நீராடி பின்னர் 22 தீர்த்தங்களை குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் பயணத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் மலர்களை தூவி அவரை வரவேற்றனர். அப்போது காரில் நின்றவாறு கையசைத்தபடி வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் பிரதமர் புனித நீராடினார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண கதாவில் அவர் கலந்து கொண்டார்.
இன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்கும் பிரதமர் மோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்கிறார். கோதண்டராமன் கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை சென்று அங்கிருந்து விமான மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் செல்லும் வழித்தடம், தங்கும் இடமான ராமகிருஷ்ண மடம், திருக்கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.